திருநாவுக்கரசு சுவாமிகள் தேவாரம் |
ஐந்தாம் திருமுறை |
5.11 திருமீயச்சூர் இளங்கோயில் - திருக்குறுந்தொகை |
தோற்றுங் கோயிலுந் தோன்றிய கோயிலும்
வேற்றுக் கோயில் பலவுள மீயச்சூர்க்
கூற்றம் பாய்ந்த குளிர்புன் சடையரற்
கேற்றங் கோயில்கண் டீரிளங் கோயிலே.
|
1 |
வந்த னையடைக் கும்மடித் தொண்டர்கள்
பந்த னைசெய்து பாவிக்க நின்றவன்
சிந்த னைதிருத் துந்திரு மீயச்சூர்
எந்த மையுடை யாரிளங் கோயிலே.
|
2 |
பஞ்ச மந்திர மோதும் பரமனார்
அஞ்ச ஆனை யுரித்தன லாடுவார்
நெஞ்சம் வாழி நினைந்திரு மீயச்சூர்
எந்த மையுடை யாரிளங் கோயிலே.
|
3 |
நாறு மல்லிகை கூவிளஞ் செண்பகம்
வேறு வேறு விரித்த சடையிடை
ஆறு கொண்டுகந் தான்றிரு மீயச்சூர்
ஏறு கொண்டுகந் தாரிளங் கோயிலே.
|
4 |
வெவ்வ வண்ணத்து நாகம் வெருவவே
கவ்வ வண்ணக் கனல்விரித் தாடுவர்
செவ்வ வண்ணந் திகழ்திரு மீயச்சூர்
எவ்வ வண்ணம் பிரானிளங் கோயிலே.
|
5 |
பொன்னங் கொன்றையும் பூவணி மாலையும்
பின்னுஞ் செஞ்சடை மேற்பிறை சூடிற்று
மின்னு மேகலை யாளொடு மீயச்சூர்
இன்ன நாள்அக லாரிளங் கோயிலே.
|
6 |
படைகொள் பூதத்தன் பைங்கொன்றைத் தாரினன்
சடைகொள் வெள்ளத்தன் சாந்தவெண் ணீற்றினன்
விடைகொ ளூர்தியி னான்றிரு மீயச்சூர்
இடைகொண் டேத்தநின் றாரிளங் கோயிலே.
|
7 |
ஆறு கொண்ட சடையினர் தாமுமோர்
வேறு கொண்டதோர் வேடத்த ராகிலுங்
கூறு கொண்டுகந் தாளொடு மீயச்சூர்
ஏறு கொண்டுகந் தாரிளங் கோயிலே.
|
8 |
வேதத் தானென்பர் வேள்வியு ளானென்பர்
பூதத் தானென்பர் புண்ணியன் றன்னையே
கீதத் தான்கிள ருந்திரு மீயச்சூர்
ஏதந் தீர்க்கநின் றாரிளங் கோயிலே.
|
9 |
கடுக்கண் டன்கயி லாய மலைதனை
எடுக்க லுற்ற இராவணன் ஈடற
விடுக்க ணின்றி வெகுண்டவன் மீயச்சூர்
இடுக்கண் தீர்க்கநின் றாரிளங் கோயிலே.
|
10 |
திருச்சிற்றம்பலம் |